இராப்போஜனம் Tucson, Arizona, USA 65-1212 1தேவனுடைய வார்த்தையிலிருந்து விழிப்பூட்டும் செய்தியை சகோ. பியரி சற்று முன்பு கொடுத்தார். “நித்திய தேவனை நாம் கட்டுப்படுத்துகிறோம், காலவரம்பிற்குட்படுத்துகிறோம், நாம் அவ்விதம் செய்யலாகாது” என்று அவர் கூறினது எவ்வளவு பெரிதான உண்மையாயிருக்கிறது இன்றிரவு நாம் வேறொன்றை சந்திக்கக் காத்திருக்கிறோம், அது தான் இராப்போஜனம். டூசானில் ஒரு திருச்சபை எழும்ப வேண்டுமென்று நான் மூன்று ஆண்டுகளாக காத்திருந்தேன், அது இப்பொழுது இங்குள்ளது. ஆம் நாம் இங்கு வந்திருக்கிறோம். ஆகவே தேவனுக்கு நாம் நன்றி செலுத்துகிறோம். அதற்காக நாம் காத்திருந்து, இப்பொழுது நாம் அதை மெச்சும் படி அவர் செய்துவிட்டார். 2இப்பொழுது நாம் திருவிருந்தில் பங்கு கொள்வதற்கு முன்பாக, நான் ஒன்று கூற விரும்புகின்றேன். அதாவது, நாம் வாழுகின்ற நம்முடைய காலத்தில் போதுமான காரியங்களை நாம் பார்த்துவிட்டோமென்று கருதுகிறேன். எனவே நம்முடைய எல்லாவற்றையும் (ஒவ்வொன்றையும்) நாம் தேவனுக்கு கொடுக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். நாம் உண்மையாகவே தேவனை சேவிக்க வேண்டும். ஏனெனில் வேத வசனத்துக்கு நேரடியான பதில்களை அவர் அளித்து நம்மை ஆசீர்வதித்திருக்கிறாறென்று நான் கருதுகிறேன். சற்று நேரத்திற்கு முன்பு சகோ. பியரி கூறினது போல், நாம் அந்த வேளைக்குள் வந்திருக்கிறோம். நாம் குருடர் அல்ல, நாம் அங்கு அடைந்துள்ளதைக் காண்கிறோம். அது மாத்திரமல்ல, நாம் சுற்றிலும் பார்த்து மனித சிந்தை மக்களை விட்டு விலகிக் கொண்டிருப்பதை நம்மால் காண முடிகிறது. நாம் இவ்வுலகில் இன்னும் நீடித்த நாட்கள் தங்கியிருக்க முடியாது, அப்படியிருந்தால், நாம் முற்றிலுமாக பைத்தியக்கார விடுதியிலிருப்பவர்களாகி விடுவோம் முழு உலகமும் அப்படியாகிவிடும். பாருங்கள்? ஆகவே நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். 3சகோ. பியரி சற்று முன்பு கூறி முடித்தது போன்று, அவை உண்மையென்று நாமறிந்திருக்கிறோம். அவை உண்மையாயிருக்கின்றன, அவை கட்டுக்கதைகளல்ல. அவை நாம் கற்பனை செய்யும் ஏதோ ஒன்றல்ல. அவை தேவனுடைய வார்த்தையின் மூலம் நேரடியாக நமக்குக் கொடுக்கப்பட்டு, நமக்கு முன்பாக பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்ட ஒன்றாயிருப்பதால், நாம் இங்கு அடைந்துள்ளோமென்பதை அறிந்தவர்களாயிருக்கிறோம். இன்னும் எவ்வளவு காலமென்று நமக்குத் தெரியாது. ஏனெனில் நாம் மறுபடியும், அது என்ன நேரமாயிருக்குமென்ற விழிப்புக்குள் வந்திருக்கிறோம். ஆனால் நாம் அந்த நேரத்தில் தான் இருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம். அது தேவனுடைய நேரமாயிருக்குமோவென்று நான் எண்ணவகையுண்டு. ஒருமுறை யாரோ ஒருவர் ஒரு சிறு கணக்கு போட்டார். அதாவது, அவரை தேவன் இவ்வுலகில் உயிரோடு வைத்திருந்து, ஒரு குறிப்பிட்ட காலத்தை அவருக்கு அளித்திருப்பாரானால் - அவருக்கு ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாளாக இருக்கும். ஆகவே ஒரு மனிதன் எழுபது ஆண்டுகள் வாழ்ந்தால், தேவனுடைய நேரத்தின்படி அது சில நிமிடங்களாக மாத்திரமேயிருக்கும். பாருங்கள்? அப்படியானால், நாற்பது ஆண்டுகள் என்பது, அவருடைய பார்வையில் அது நேரமாகவே இருக்காது. அது அவர் கண் இமைக்கும் நேரமாயிருக்கும். பாருங்கள்? அது முழுவதுமே அவ்வளவு வேகமாக இருக்கும் அளிக்கப்பட்ட அந்த நேரம். அவருக்கு காலம் என்பதே கிடையாது. அவர் நித்தியமானவர். 4ஒரு நாள் இரவு நானும் சகோ. பியரியும் இருக்கும் போது, 'சாராள்' அல்லது சிறுவன் ஜோசப் என்று நினைக்கிறேன் என்னிடம் வந்து, அப்பா, கடவுள் எங்கே, எப்பொழுது தோன்றினார்? அவர் எங்கிருந்து வந்தார் பாருங்கள்? அவருக்குத் தொடக்கமென்று ஒன்று இருக்க வேண்டுமல்லவா? அவர் ஆரம்பமாக வேண்டியதில்லையா? என்று கேட்டான். நான், “அப்படியல்ல, தொடக்கமுள்ள எதற்கும் ஒரு முடிவு இருக்கும். எதற்கு தொடக்கமில்லையோ அதற்கு முடிவிராது'' என்றேன். ஆனால் அப்பொழுது அவனுக்கு பத்தே வயது. நான் சொன்னவற்றை அவனால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஒன்றிற்கு தொடக்கமேயில்லை என்பதை அவனால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அவன் மட்டுமல்ல, நானும் அப்படியே. பாருங்கள்? அது எப்படி தோன்றினது என்பது எனக்கு விளங்கிக்கொள்ள முடியாத புதிராகவே இருக்கிறது. 5மெய்யாகவே புனிதமான ஒன்றை நாம் இங்கு ஆசரிக்கத் தீர்மானித்திருக்கிறோம். சில நாட்களுக்கு முன்பு மிகவும் அருமையான கிறிஸ்தவ சான்றோர் ஒருவரைக் காண அழைக்கப்பட்டிருந்தேன். அவர் இவ்விதமான திருவிருந்தில் பங்கு கொண்டதேயில்லை. நாம் அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் (WINE) உட்கொண்டு திருவிருந்தை ஆசரிக்கிறோமென்பதை அவர் அறிந்து கொண்டார்“. அவர்கள், ''ஆவிக்குரிய திருவிருந்து'' என்று அவர்கள் அழைக்கும் ஒன்றை ஆசரிக்கின்றனர். அது, ”ஐக்கியம்“ (Communion) என்பதைப் பொறுத்த வரையில் சரியே. ஏனெனில் ஆங்கிலத்தில் அந்த சொல் ”அளவளாவுதல்“ என்னும் பொருள் பெறும். அந்த சகோதரன் ஒரு வேத வாக்கியத்தை எனக்கு எடுத்துரைத்து, ”சகோ. பிரான்ஹாமே, அது சரியென்று இப்பொழுது கருதுகின்றீர்களல்லவா“ என்று என்னைக் கேட்டார். இதை நான் கூறும் காரணம் என்னவெனில் சகோ. பியரி, இதை கூறினால் பரவாயில்லையா? (சகோ. பியரி கிரீன், “நிச்சயமாக” என்று பதிலுரைக்கிறார் - ஆசி). நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் புரிந்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகவே இதைச் சொல்லுகிறேன். நீங்கள் எதற்குள்ளும் கண் மூடித்தனமாக பிரவேசித்துவிட்டால், நீங்கள் என்ன செய்கிறீர்களென்பதை அறியாமலே இருந்துவிடுவீர்கள். அப்படிப்பட்ட ஒரு நிலையில், நீங்கள் செய்வதன் பேரில் உங்களுக்கே உறுதிப்பாடு இருக்காது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் எதற்காக அதை செய்கிறீர்கள் என்பதை அறிந்தவர்களாயிருக்க வேண்டும். அவர், “நாம் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளும் போது, தேவனை உட்கொள்வதற்கு அது சமமல்லவா? என்று கேட்டார். நான், “ஐயா, அது முற்றிலும் சரி. அது உண்மை. ஆனால் அவர்கள் உண்மையாகவே இராப்போஜனத்தில் பங்கு கொண்டதாக நாம் இங்கு படிக்கிறோமே. ''நாம் அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் (WINE) உட்கொண்டு கர்த்தருடைய இராப்போஜனத்தை ஆசரிக்க வேண்டுமென்று பவுல் கற்பித்தான்”. இயேசுவும், “என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள்” என்றார். “ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து இந்த பாத்திரத்தில் பானம் பண்ணும் போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்”, என்று பவுல் கூறினான், என்றேன். பாருங்கள்? அதை நாம் உட்கொள்ள வேண்டும். 6பரிசுத்த பவுல், புதிய ஏற்பாட்டின் தீர்க்கதரிசி என்னும் முறையில், இராப்போஜனத்தை ஆசரிக்க வேண்டுமெனும் நியமத்தை சபைக்கு அளித்தான். பேதுரு, யாக்கோபு, யோவான் (ஏன், மத்தேயு, மாற்கு, லூக்காவும் கூட) இயேசு சொன்னவைகளை எழுதி வைத்தனர். ஆனால் பவுலோ சபையை ஒழுங்குபடுத்தினான். ஏனெனில் அவன் புதிய ஏற்பாட்டின் தீர்க்கதரிசியாயிருந்தான். வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்களையும் எழுதுவதற்கான ஏவுதலை மோசே வனாந்தரத்திற்குச் சென்று பெற்றுக் கொண்டது போல், பவுலும் பாலைவனத்திற்குச் சென்று தேவனிடத்திலிருந்து ஏவுதலைப் பெற்று, புதிய ஏற்பாட்டு சபையை ஒழுங்குபடுத்தி, பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டுக்கு முன்னடையாளமாயுள்ளதென்பதை எடுத்துரைத்தான். எகிப்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் வெளி வருவதற்கு முன்பு ஒரு ஆட்டுக்குட்டியை பலி செலுத்தினர். அது ஒரு முறை மாத்திரமே செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் அதை காலங்கள்தோறும் ஒரு ஞாபகார்த்தமாக ஆசரித்து வந்தனர். “நியாயப்பிரமாணம் வரப்போகும் காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது”, பார்த்தீர்களா? நாம் “ஐக்கியம்” என்னும் அர்த்தமுள்ள ஆங்கிலச் சொல்லை (Communion) உபயோகிக்கிறோம். அது கர்த்தருடைய இராப்போஜனத்தையே குறிப்பிடுகிறது என்பது என் கருத்து. 7நாம் சரீரப் பிரகாரமாக ஆசரிப்பதற்கு மூன்று தெய்வீக நியமங்கள் நமக்களிக்கப்பட்டுள்ளன. அவைகளில் ஒன்று இராப்போஜனம், மற்றவை கால்களைக் கழுவுதல், தண்ணீர் ஞானஸ்நானம். இம்மூன்று மாத்திரமே. அந்த மூன்றும் பரிபூரணத்துக்கு எடுத்துக்காட்டாயிருக்கிறது. இம்மூன்று நியமங்களை மாத்திரமே நாம் பெற்றிருக்கிறோம். இவை பரிசுத்த பவுலினால் புதிய ஏற்பாட்டில் அளிக்கப்பட்ட நியமங்களென்று நாமறிவோம். “வார்த்தையை ஏற்றுக்கொள்வது தான் திருவிருந்து'' என்று நாம் கூறுவோமானால், கர்த்தருடைய வார்த்தையை ஒருவன் தன் இருதயத்தில் ஏற்றுக்கொள்ளும் வரைக்கும் கர்த்தருடைய இராப்போஜனத்தில் பங்கு கொள்ள அவனுக்கு உரிமை கிடையாது என்பது என் கருத்து. பாருங்கள்? உங்களுக்கு நான் படித்துக் காண்பிக்கப் போகின்றேன். இன்னும் சிறிது நேரத்தில் உங்களுக்கு நான் படித்துக் காண்பிக்கிறேன், அப்பொழுது நீங்கள் அறிந்து கொள்வீர்கள். இப்பொழுது, கவனியுங்கள், பின்னை ஏன் நாம்.'' அதே அடிப்படையில் இரட்சண்ய சேனை (Salvation Army) கூட்டத்தாரின் கருத்து முற்றிலும் நியாயமானது என்று நாம் கூறிவிடலாமே. அவர்களுக்கு எந்த விதமான தண்ணீர் ஞானஸ்நானம் பெறுவதிலும் நம்பிக்கை கிடையாது. “அது எங்களுக்கு அவசியமில்லை” என்று அவர்கள் சொல்லுகின்றனர். நமக்கு தண்ணீர் ஞானஸ்நானம் அவசியமில்லையென்றால், பின்னை ஏன் நாம் ஞானஸ்நானம் பெறுகிறோம்? அவர்கள், “தண்ணீர் உங்களை இரட்சிப்பதில்லை, இரத்தம் மாத்திரமே இரட்சிக்கிறது”, என்கின்றனர். அதை நான் ஒப்புக் கொள்கிறேன், அது சரிதான். இரத்தம் தான் உங்களை இரட்சிக்கிறது, தண்ணீர் அல்ல. ஆனால் கிருபையின் உள்ளான கிரியை முடிந்துவிட்டதென்பதை வெளிப்படையாக அறிவிக்க நாம் தண்ணீர் ஞானஸ்நானம் பெறுவது அவசியம். பாருங்கள்? அது போன்றே இராப்போஜனத்தையும் நாம் கைக்கொள்ள வேண்டும். 8நாம் நமது பலியாகிய கர்த்தரை, ஆவிக்குரிய பிறப்பு என்னும் வகையில், நமக்குள் ஏற்றுக்கொண்ட பிறகு, நாம் வார்த்தையின் மூலம் அவரில் ஜீவிக்கிறோம். அதை நாம் அடையாளமாக காண்பிக்க வேண்டும். ஏனெனில் அது, “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று நமக்களிக்கப்பட்ட கட்டளை. பவுல், “நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக் கொண்டேன். என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, அதைப்பிட்டு நீங்கள் வாங்கிப் புசியுங்கள், என்னை நினைவு கூரும் படி இதைச் செய்யுங்கள் என்றார். ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து இந்த பாத்திரத்தில் பானம் பண்ணும் போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தை தெரிவிக்கிறீர்கள்” என்றான். ஜனங்கள் கூடிவந்து இராப்போஜனத்தில் பங்கு கொண்டனர் என்று அதிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம். 9ஆனால் இந்த விலையேறப் பெற்ற சகோதரன், மிகவும் அருமையான சகோதரன், என்னிடம், சகோ.பிரான்ஹாமே, அதை நான் கைக்கொண்டதேயில்லை, அது என்னவென்று எனக்குப் புரியவில்லை. நான் வேறு விதமாக போதிக்கப்பட்டிருக்கிறேன்“ என்றார். நான், “ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள். ஆதி கிறிஸ்தவ திருச்சபையை பரி. பவுல் ஒழுங்கு படுத்தினான் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அவர்கள் வீடுகள் தோறும் ஒருமனப்பட்டவர்களாய் அப்பம் பிட்டனர். அவன் அதை சபையில் வைத்தான். வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனும் கூட வேறெதையாகிலும் சொன்னால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன் என்று கலாத்தியர்:1.8, உரைக்கிறது. பாருங்கள், அவன் யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தைப் பெற்றவர்கள் மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறும்படி செய்தான் என்றேன். பாருங்கள், நாம் மூன்று காரியங்களைக் கைக்கொள்ள வேண்டியது அவசியம்: மூன்று காரியங்களை நாம் அடையாளங்களாக கைக்கொள்ள வேண்டும். கர்த்தருடைய இராப்போஜனம், கால்களைக் கழுவுதல், தண்ணீர் ஞானஸ்நானம். பாருங்கள்? 10நீங்கள், “அப்படியானால்'' என்கிறீர்கள். இரட்சணிய சேனைக் கூட்டத்தார், ”சிலுவையில் மரித்துக் கொண்டிருந்த கள்ளன் ஞானஸ்நானம் பெறவில்லை இருப்பினும், அவன் பரலோகத்தில் இருப்பான் என்று இயேசு கூறினாரே“, என்று சுட்டிக் காட்டுகின்றனர். அது முற்றிலும் உண்மை. அது உண்மையே. ஆனால் பாருங்கள், அவன் மரிக்கும் நேரத்தில் தான் இயேசுவை அடையாளம் கண்டு கொண்டான். பாருங்கள்? அந்த ஒரு தருணம் மாத்திரமே அவனுக்கிருந்தது. அவன் ஒரு கள்ளன். அவன் புறம்பாயிருந்தான் அவன் அகன்றிருந்தான். அந்த வெளிச்சத்தை அவன் கண்ட மாத்திரத்தில், அவன் அதை அறிந்து கொண்டு, ”ஆண்டவரே, அடியேனை நினைவு கூரும்“ என்றான். அப்பொழுது இயேசு.... அது உண்மை . ஆனால் நாம் ஞானஸ்நானம் பெற வேண்டுமென்று நீங்களும் நானும் அறிந்த பின்பும், அதை மறுத்தால், அது உங்களுக்கும் தேவனுக்குமிடையே உள்ள ஒன்று. இராப்போஜன விஷயத்திலும் அவ்வாறே நாம் இராப்போஜனத்தை கைக்கொள்ளும் போது, “இங்கு நான் வந்து அப்பத்தைப் புசித்து, நான் கிறிஸ்தவன் என்று விசுவாசிப்பேன்”, என்றல்ல. நீங்கள் கவனிப்பீர்களானால், “எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம் பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும், இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான்” என்று வேதம் உரைக்கிறது பாருங்கள்? நீங்கள் உத்தமமானவர்களென்று காண்பிக்கும் ஒரு வாழ்க்கையை ஜனங்களுக்கு முன்பாகவும் தேவனுக்கு முன்பாகவும் நடத்த வேண்டும். 11இப்பொழுது, இன்னும் சிறிது நேரம். பழைய ஏற்பாட்டில் பலி செலுத்துதல் ஒரு நியமமாக ஆக்கப்பட்டது. அவ்வாறே தண்ணீர் ஞானஸ்நானமும் ஒரு நியமமாயிருக்கிறது கால்களைக் கழுவுதல் ஒரு நியமமாயிருக்கிறது, கர்த்தருடைய இராப்போஜனமும் ஒரு நியமமாயிருக்கிறது. “கர்த்தருடைய கட்டளைகளை நிறைவேற்றி, அவருடைய நியமங்களையும், கற்பனைகளையும் கைக்கொள்கிறவன் பாக்கியவான், அவன் ஜீவ விருட்சத்தைச் சுதந்தரிக்கும் உரிமையைப் பெறுவான்.” இப்பொழுது, இங்கே இதை கவனியுங்கள். தேவாலயத்திலுள்ள பலிபீடத்திற்கு வந்து உங்கள் காணிக்கையை உங்கள் பாவதிற்காக ஆட்டுக் குட்டியை பலி செலுத்த வேண்டுமெனும் தேவனுடைய கட்டளை முதன்முதலாக அளிக்கப்பட்ட போது, ஒரு யூத சகோதரன் சாலையின் வழியாக வந்து, அவன் குற்றமுள்ளவன் என்பதை அறிந்தவனாய் பலிபீடத்திற்கு சென்று, ஒரு கொழுத்த காளையை அல்லது ஒரு எருதை, ஒரு செம்மறியாட்டுக்கடா, ஆட்டுக்குட்டி இவைகளில் ஏதோ ஒன்றை சாலையின் வழியாக ஓட்டிக்கொண்டு வந்து அவனால் இயன்றவரை தேவனுடைய நியமத்தை உத்தமமாக கைக்கொள்வதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. அவன் அதன் மேல் தன் கைகளை வைத்து, தன் பாவங்களை அறிக்கையிடுகிறான். ஆசாரியன் இதை (அவன் பாவங்களை) ஆட்டுக்குட்டியின் மேல் சுமத்துகிறான். பிறகு அந்த ஆட்டுக்குட்டியின் தொண்டை அறுக்கப்படுகிறது அது அவனுக்காக சாகிறது. பலிபீடத்தின் மேல் அந்த சிறு ஆட்டுக்குட்டி கிடந்து, கால்களை உதைக்கிறது, இரத்தம் பீறிட்டு வருகிறது. அவனுடைய கைகள் இரத்தத்தால் நிறைந்து, அது அவன் மேல் முழுவதும் சிதறுகிறது (அந்த சிறு ஆட்டுக்குட்டி சத்தமிட்டுக் கொண்டு ஜீவனை விடுகிறது), அவன் பாவம் செய்தானென்றும், அவனுக்கு பதிலாக ஏதேனும் ஒன்று மரிக்க வேண்டுமென்றும் அவன் உணருகிறான். ஆகவே அவன் சாகிறதற்குப் பதிலாக இந்த ஆட்டுக்குட்டியை சாகக் கொடுக்கிறான். பாருங்கள், அவனுடைய இடத்தில் அந்த ஆட்டுக்குட்டி சாகிறது. அந்த மனிதன் உத்தமமாக, தன் இருதயத்தின் ஆழத்திலிருந்து அதை செய்தான். 12இவ்விதமாக காலங்கள் தோறும் அது நடந்து கொண்டிருந்தது. அது மீண்டும் மீண்டுமாய் வந்து, இறுதியில் ஒரு பாரம்பரியமாகி விட்டது. தேவனுடைய கட்டளை மக்களுக்கு பாரம்பரியமாக மாறிவிட்டது. பின்பு பலி செலுத்த வேண்டியவன் அங்கு வந்து, “இது என்ன நாள் என்று பார்ப்போம். இது இன்னின்ன நாள். நான் சென்று ஒரு எருதை பலி செலுத்தி விட்டு வருவது நலம்”, என்று சொல்லி விட்டு சென்று, “ஆண்டவரே, இதோ என் எருது” என்கிறான். பாருங்கள், அதில் எந்த உத்தமமும் இல்லை , அதன் முக்கியத்துவமும் உணரப்படுவதில்லை . நாம் அந்த விதமாக இராப்போஜனத்தில் பங்குகொள்ளக் கூடாது. கர்த்தருடைய பந்திக்கு நாம் அதே விதமாகவே வருகிறோம். ஏசாயா:35ம் அதிகாரம், இல்லை, என்னை மன்னித்துக் கொள்ளவும். ஏசாயா:60ம் அதிகாரம். வேதாகமத்தை திறந்து பார்ப்போம். அது ஏசாயா:28ம் அதிகாரம் என்று நினைக்கிறேன். அங்கு தான் அதை காண்கிறோம். அது தான் சரியான அதிகாரம் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். அவர், “கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும், அங்கே கொஞ்சமும் என்கிறார்கள். நலமானதைப் பிடித்துக்கொள். பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவேன். இதுவே இளைப்பாறுதல்” என்றார். (ஏசாயா - 28:10-12). “போஜன பீடங்களெல்லாம் வாந்தியினால் நிறைந்திருக்கிறது. அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? நான் யாருக்கு உபதேசத்தை உணர்த்துவேன்?” பாருங்கள்? ஏசாயா:28 தான் சரியான அதிகாரம் என்று நினைக்கிறேன். “ நான் யாருக்கு உபதேசத்தை உணர்த்துவேன்?” பாருங்கள், “போஜன பீடங்களெல்லாம்”. 13ஆனால் இன்று நாம் காண்பது என்னவெனில், அவருடைய மரணத்தை நினைவுகூருவதற்கென்று இன்றிரவு நாம் ஆசரிக்க விருக்கும் இந்த மகத்தான காரியம், அவருடைய சரீரத்தை நாம் தினந்தோறும் புசிக்கிறோம், அல்லது நம்முடைய சகோதரன் நமக்கு பிரசங்கித்தது போன்று, இப்பொழுது தான் புசித்து முடித்தோம். நாம் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு அதை முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறோம். அப்பொழுது அது வெளிப்படுவதைக் காண்கிறோம், அது நமக்குக் கொடுக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம், நாம் என்ன செய்கிறோமென்பதைக் குறித்து ஆழமாக அறிந்தவர்களாக இந்த பந்திக்கு வரவேண்டுமேயன்றி, அது ஒரு நியமமாக அளிக்கப்பட்டுள்ளது என்பதனாலல்ல. நீங்கள் ஒரு ஆலயத்திற்கு செல்லும் போது அவர்கள் பிஸ்கோத்து அல்லது ரொட்டி போன்ற ஏதோ ஒன்றை பிட்டுக் கொடுக்கிறார்கள். புகை பிடிப்பவர்களும், மது அருந்துபவர்களும், மற்ற பழக்கவழக்கங்களை உடையவர்களும், அவர்கள் அந்த சபையின் உறுப்பினர் என்னும் காரணத்தால், அங்கு வந்து கர்த்தருடைய இராப்போஜனத்தில் பங்குக்கொள்கின்றனர். அது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது. 14பலியைக் குறித்தும் கூட அவர், “உங்கள் பரிசுத்த பண்டிகைகளும், உங்கள் பலிகளும் என் நாசியில் துர்நாற்றமாயிருக்கிறது” என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும், பலி செலுத்த வேண்டுமென்று அவர் தான் அவர்களுக்கு கட்டளைக் கொடுத்தார். அவர் நியமித்த அதே பலி, அவர்கள் அதை பாவித்த முறையின் காரணமாக, அவருடைய நாசியில் துர்நாற்றமாக மாறினது. தேவனுடைய வார்த்தையையும் கூட அதேவிதமாகத் தான் இன்று நாம் பாவிக்கிறோம். கிறிஸ்தவர்களென்று தங்களை அழைத்துக்கொள்ளும் பெரும்பாலோர் அப்படி செய்கிறார்கள். நாம் இங்கு நின்றுக் கொண்டு, தேவனுடைய வார்த்தையை போதித்து, “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” என்றும், அவர் நமக்கு வாக்களித்துள்ளவைகளை நிறைவேற்றுவார் என்றும் சொன்னால், அவர்கள், ஓ, அது மற்றொரு காலத்துக்குரியது“, என்று சொல்லி விடுகின்றனர். நம்முடைய சோதோமிய ஆராதனை அவருடைய நாசியில் துர்நாற்றமாக அமைந்துவிட்டது. அவர் அதை எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ள மாட்டார். நம்முடைய பாரம்பரிய பழக்க வழக்கங்களே அதற்கு காரணம். 15நீங்கள் கர்த்தருடைய இராப்போஜனத்தில் பாரம்பரியத்தின் காரணமாக பங்கு கொள்வதில்லை. உங்கள் இருதயத்தில் தேவனுடைய அன்பு நிலைத்திருப்பதனால், தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து அதில் பங்குக்கொள்கிறீர்கள். பாருங்கள், அதற்காகவே நீங்கள் பங்குக்கொள்கிறீர்கள். ஆகவே நீங்கள் அதை உத்தமத்தோடு கைக்கொள்ளாமல், “நல்லது எங்கள் சபை இராப்போஜனத்தை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அல்லது மாதத்திற்கு ஒரு முறை, அல்லது ஆண்டிற்கு இருமுறை ஆசரிக்கிறது” என்று சொல்லிக் கொண்டு, அதில் பங்குக்கொள்ள என் நேரம் வந்து விட்டது“ என்று சொல்லி பாரம்பரியமாக இராப்போஜனத்தில் பங்கு கொள்வீர்களானால், அது தேவனுக்கு துர்நாற்றமாயிருக்கிறது பாருங்கள், அது வெறும் பாரம்பரியம் மாத்திரமே. மற்ற எல்லாவற்றிலும் போல, இதிலும் நீங்கள் உத்தமமாயிருக்க வேண்டும். தேவனுக்கு உங்கள் இருதயத்தின் ஆழம் வேண்டும். உங்களை இவ்வுலகிற்கு கொண்டு வந்த அந்த தேவனையே நீங்கள் சேவிக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் இப்படி சொல்லியிருப்பதால், அது அவருடைய கட்டளையாயிருப்பதனால், நீங்கள் இதைச் செய்கிறீர்கள். தேவனுடைய கிருபையினால் நாம் இரட்சிக்கப்பட்டோம் என்று நாம் அறிந்து, ஆழமான உத்தமத்துடன் நாம் வந்து இதில் பங்குக்கொள்ள வேண்டும். நாம் அவரை நேசிக்கிறோம், அவருடைய சமுகத்தை நாம் உணருகிறோம். அது நம்முடைய வாழ்க்கையை மாற்றினதை நாம் காண்கிறோம். நம்முடைய அனைத்துமே மாறிவிட்டது. நாம் வித்தியாசமானவர்களாகி விட்டோம். நாம் முன்பு போல் வாழ்வதில்லை, முன்பு போல் சிந்திப்பதில்லை. 16இந்த புத்தகத்திலிருப்பது போல், நாம் பேசிக் கொண்டிருந்த உடலுக்குள்ளிருக்கும் அந்த சிறு புள்ளி - இரு புத்தகங்களும் ஒன்றாயிருக்கிறது, ஜீவ புஸ்தகம். முதலாவது தோன்றின ஜீவ புஸ்தகம், நீங்கள் பிறந்த போது, அது உங்கள் இயற்கை பிறப்பு. பாருங்கள்? ஆனால் ஒரு காலத்தில், காலங்களுக்கு முன்பு, ஒரு சிறு ஜீவ வித்து உடலுக்குள்ளிருந்தது. அதைக் குறித்து வீட்டில், இன்று பிற்பகல் சில இளஞ் சகோதரிகளிடத்தில் விளக்கினேன். பாருங்கள், ஒருசிறு ஜீவ வித்து அங்கு குடி கொண்டுள்ளது. “அது எங்கிருந்து வந்தது? இந்த விசித்திரமான காரியங்களெல்லாம் என்ன?” என்று உங்களுக்கு வியப்பு தோன்றுகிறது. என்னையே நான் உதாரணமாக தெரிந்த கொண்டு அந்த சகோதரிகளுக்கு விளக்கம் தெரிவித்தேன். நீங்கள், “நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கண்ட வில்லியம் பிரான்ஹாமும் இன்றிரவுள்ள இந்த வில்லியம் பிரான்ஹாமும் அதே ஆள் தானா?” என்று கேட்பீர்களானால், பின்னாலிருந்து யாரோ ஒருவர், “அவன் பரம் அயோக்கியனாயிருந்தான்” என்று சொல்லுவார். பாருங்கள்? நான் சார்லஸ் பிரான்ஹாமுக்கும், ஈலா பிரான்ஹாமுக்கும் பிறந்தேன். அவர்களுடைய சுபாவத்தின் படியே, நான் ஒரு பாவியாய், பொய்யனாய், உலகத்தின் சகல பழக்க வழக்கங்களையும் என்னுள் கொண்டவனாய் இவ்வுலகில் வந்தேன். ஆனால் எனக்குள், ஆழத்தில் தேவனால் முன் குறிக்கப்பட்ட வேறொரு சுபாவம் இருந்தது. பாருங்கள், இந்த ஒரே உடலில் இரு சுபாவங்கள் குடி கொண்டிருந்தன. ஆனால் நான் ஒன்றை மாத்திரம் ஊட்டி வளர்த்தேன். அது வளர்ந்து வந்தது. நான் குழந்தை பருவத்தில், “அப்பா”, என்று மழலை மொழியில் பேசினேன். முதலாவதாக என்ன தெரியுமா, நான் பொய்யனாகி, ஒரு பாவிக்குள்ள எல்லாவற்றையும் பெற்று பாவியானேன். ஏனெனில் நான் அவ்வண்ணமே வளர்க்கப்பட்டேன். ஆனால் என்னுள்ளில் ஒரு சிறு ஜீவ புள்ளி காலமெல்லாம் குடி கொண்டிருந்தது. 17நான் சிறு பையனாயிருந்த போது நடந்த சம்பவங்களை நினைத்துப் பார்ப்பதுண்டு, (உங்களை நான் நீண்ட நேரம் பிடித்து வைத்திருக்கவில்லை என்று நம்புகிறேன் என் இளம் பிராயத்தில் நான் இரவு வேளையில், ஆற்றங்கரையில் உட்கார்ந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருப்பேன். அப்பாவும், அம்மாவும் இப்பொழுது மரித்து போய் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்நாட்களில் அவர்கள் பாவிகளாயிருந்தார்கள். எங்கள் வீட்டில் கிறிஸ்தவ மார்க்கம் இருந்ததேயில்லை. அங்கே குடித்தலும், விருந்தும் களியாட்டாங்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. அது எனக்கு வெறுப்புண்டாக்கியது. என் கையில் மண்ணெண்ணெய் விளக்கை எடுத்துக் கொண்டு என் நாயுடன் காட்டிற்கு சென்று, குளிர் காலத்தில் இரவு முழுவதும் தங்கியிருப்பேன். என் வீட்டில் விருந்தும் களியாட்டமும் முடியும் வரை சில நாட்களில் பொழுது புலரும் வரை - நான் வேட்டையாடிக் கொண்டிருப்பேன். நான் வீடு திரும்பும் போது, விருந்து முடிந்திருக்காது. நான் ஒரு கொட்டகையின் மேலேறி, கூரையில் உறங்கி, பொழுது புலரும் வரை காத்திருப்பேன். அந்த நாட்கள் எவ்வாறிருந்தனவென்று நான் நினைத்துப் பார்ப்பதுண்டு, கோடைக் காலத்தில் அங்கு சென்ற போது என் குச்சிகளையும் எடுத்துக் கொண்டு சிறு கூடாரம் உண்டாக்கி, காற்றுக்கும், மழைக்கும் அங்கு ஒதுங்குவது வழக்கம். அங்கு நான் படுத்துக் கொண்டிருப்பேன். மீன் பிடிக்க தண்ணீரில் தூண்டிலைப் போடுவேன். என் வேட்டை நாய் அங்கு படுத்து கொண்டிருக்கும். நான் என்னிடமே பேசிக் கொண்டு. “இங்கே பார். சென்ற குளிர் காலத்தின் போது ஒரு இரவு இங்கு கூடாரம் அடித்திருந்தேன். என் நாய்க்காக நான் மரத்தடியில் காத்திருந்த போது, இங்கு நெருப்புண்டாக்கினேன். நிலத்தின் மேல் ஐந்து அங்குலம் உயரத்துக்கு பனிக்கட்டி உறைந்திருந்தது. ஆனால் சின்னஞ்சிறு பூவே, நீ எங்கிருந்து வந்தாய்? யார் இங்கு வந்து உன்னை நட்டார்கள்? எந்த செடிகள் வளர்க்கும் இடத்திலிருந்து உன்னைக் கொண்டு வந்தார்கள்? சின்னஞ்சிறு பூவே, நீ எங்கிருந்து வந்தாய்? நீ இப்பொழுதுள்ள இடம் பனிக்கட்டியால் உறைந்திருந்தது. அதன் மேல் இங்கு நான் நெருப்பு மூட்டினேன். இங்கு உறைந்த சாதனம் தவிர, ஒரு பெரிய கட்டைக்கு நான் தீ மூட்டிய தன் விளைவாக, வெப்ப சாதனமும் இருந்தது. அப்படியிருந்தும் கூட, நீ உயிருடனிருக்கிறாயே நீ எங்கிருந்து வந்தாய்?” என்றேன். 18அது என்ன? வேறொரு வில்லியம் பிரான்ஹாம் இருந்தான். பாருங்கள்? தேவனுடைய மரபணுவிலிருந்து (gene) புறப்பட்டு வந்த நித்திய ஜீவனின் மிகச் சிறிய பாகம் உள்ளேயிருந்தது. தேவனுடைய வார்த்தை அங்கு வைக்கப்பட்டிருந்தது. நீங்கள் ஒவ்வொருவரும், உங்கள் வாழ்க்கையில் நேர்ந்த இதற்கிணையான சம்பவங்களை நினைத்துப் பார்க்க முடியும். பாருங்கள், அது இயங்கிக் கொண்டிருந்தது. பின்பு நான் மரங்களை ஏறிட்டுப் பார்த்து,“ இலையே, சென்ற ஆண்டு நீ உதிர்ந்து போனதைக் கண்டேனே, எவ்விதம் நீ மீண்டும் இங்கு வந்தாய்? நீ எங்கிருந்து வந்தாய்? உன்னை இங்கு கொண்டு வந்தது எது?” என்று மனதில் எண்ணினேன். பாருங்கள், நித்திய ஜீவன் சரீரத்தில் இயங்கிக் கொண்டிருப்பதை இதன் மூலம் கண்டேன். ஒரு நாள் நான் நடந்து சென்று கொண்டிருந்த போது, அந்த சத்தம் என்னுடன் பேசி, “புகை பிடிக்காதே, மது அருந்தாதே”, என்றெல்லாம் சொன்னது வாலிபர்களும் மற்றவர்களும் வளர்ந்து, அவர்களுக்கு வயதாகிக் கொண்டே சென்றது. பாருங்கள், ஏதோ ஒன்று அசைவாடினது. திடீரென்று ஒரு நாள் நான் மேல் நோக்கி, “நான் சார்லஸ், ஈலா பிரான்ஹாம் என்பவர்களின் மகனல்ல. ஏதோ வொன்று அழைக்கிறது”, என்றேன் என் கதையிலுள்ள கழுகுக்குஞ்சு சொன்னது போல், நான் கோழிக்குஞ்சு அல்ல. தொலை தூரத்தில் எங்கோ ஏதோ ஒன்று இருக்கிறது. ஓ, மகத்தான யேகோவாவே, நீர் யாராயிருந்தாலும் உம்முடைய செட்டைகளை விரியும் நான் வீட்டிற்கு வர விரும்புகிறேன். எனக்குள்ளிருக்கும் ஏதோவொன்று அழைக்கிறது.“ அப்பொழுது நான் மறுபடியும் பிறந்தேன். உள்ளே கிடந்திருந்த அந்த சிறு ஜீவனின் மேல் ஜீவத் தண்ணீர் ஊற்றப்பட்ட போது, அது வளரத் தொடங்கினது. என் பழைய வாழ்க்கை மன்னிக்கப்பட்டு, தேவனுடைய மறதிக்கடலினுள் போடப்பட்டு விட்டது, எனக்கு விரோதமாக அது இனி ஒரு போதும் நினைவு கூரப்படுவதில்லை. பாருங்கள்? இப்பொழுது நாம் நீதிமான்களாக்கப்பட்டவர்களாக (நாம் ஒருக்காலும் பாவமே செய்யாதவர் போன்று) தேவனுடைய சமுகத்தில் நின்று கொண்டிருக்கிறோம். 19நாம் கர்த்தருடைய பந்திக்கு வரும் போது, பயபக்தியோடும், அன்போடும், மரியாதையோடும் வந்து, “அவர் இதைச் செய்யாவிட்டால், நாம் எங்கிருந்திருப்போம்?” என்று எண்ணிப் பார்க்க வேண்டும் பாருங்கள்? அது எங்கே நம்மை.... ஆகவே, பவுல் இதை சொன்னானென்று நினைக்கிறேன். “நீங்கள் போஜனம் பண்ணக் கூடிவரும் போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்” என்று வேறு விதமாக கூறினால், சில நிமிடங்கள் காத்திருந்து ஜெபித்து, உங்களை சோதித்தறியுங்கள். தவறு செய்யும் தருவாயில் ஒரு சகோதரன் இருக்கிறார் என்று நீங்கள் அறிந்தால், அவருக்காகவும் நீங்கள் ஜெபம் செய்யுங்கள். “ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள்”, என்றால், ஒரு நிமிடம் காத்திருந்து ஜெபியுங்கள் என்பதாம். உங்களுக்கிடையே மனவருத்தம் இருக்குமானால், பந்தியில் சேராதீர்கள். முதலில் போய் அதை சரி செய்து கொள்ளுங்கள். பாருங்கள்? முதலில் அதை நேராக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் நம்மால் இயன்றவரை நாம் தூய்மையுடன் பந்திக்கு வர வேண்டும். நாம் ஒருவரிலொருவரிலும் தேவனிடத்திலும் தூய்மையான எண்ணம் கொண்டிருந்து, பிறகு கர்த்தருடைய பந்தியில் ஐக்கியங்கொள்ள நாம் வர வேண்டும். பாருங்கள்? 20நாம் தேவனுக்கும், ஒருவர் மற்றவருக்கும் நன்றி செலுத்தும் வகையில், நம்மிடையே அப்பத்தை அவருடைய சரீரமாகவும், திராட்சரசத்தை அவருடைய இரத்தமாகவும் புசித்து பருகுகிறோம். நீங்கள் மனுஷ குமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை,“ பாருங்கள்? அப்படித் தான் வேதம் சொல்லுகிறது. நீங்கள் இப்படி செய்யாவிட்டால் உங்களுக்குள் ஜீவன் இராது. பார்த்தீர்களா? அப்படியானால், இப்பொழுது நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையின் நிமித்தம். உங்களை கிறிஸ்தவனென்று அடையாளம் காண்பிக்க உங்களுக்கு வெட்கமாயிருக்கிறதென்பதை அது ஏறத்தாழ காண்பிக்கிறது. இது தான் உண்மையில் ஒரு பலப்பரீட்சை நீங்கள் கர்த்தருடைய இராபோஜனத்தில் பங்குகொள்ளாமல் போனால் உங்களுக்குள் ஜீவனில்லை. அதில் அபாத்திரமாய் நீங்கள் பங்கு கொண்டால், கர்த்தருடைய சரீரத்தைக் குறித்து நீங்கள் குற்றமுள்ளவர்களாயிருப்பீர்கள். 21அவ்வாறே தண்ணீர் ஞானஸ்நானத்திலும். “நாங்கள் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறோம். அவர் எங்களை பாவத்திலிருந்து இரட்சித்தார், நாங்கள் இயேசுகிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுள்ளோம்”, என்று கூறிக் கொண்டு நாம் தவறானவைகளைச் செய்தால், நாம் அவருக்கு அவமானத்தைக் கொண்டு வருகிறவர்களாயிருப்போம். அதற்குரிய தண்டனையை நாம் அடைந்தே தீர வேண்டும். வேறொரு காரியம், நாம் இப்படிச் செய்யும் போது, நாம் நம்புவதொன்று, செய்வது வேறொன்றாக ஆகிவிடுகிறது. இன்று நம்மிடத்தில் காணப்படும் தொல்லை அது தான். நான் என்ன நினைக்கிறேன் என்றால்.., “நாம்” என்று குறிப்பிட விரும்புகிறேன். அதாவது நானும், இந்த கடைசி மணி வேளையில் தேவனாகிய கர்த்தர் நான் பேச அனுமதித்திருக்கிற இந்த சபையுமாக சேர்ந்து, நாம் இறுதி வேளையில் இருக்கிறோமென்று விசுவாசிக்கிறோம். தேவன் நமக்கு ஒரு செய்தி தந்திருக்கிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம். அது தேவனால் நியமிக்கப்பட்டு, அவரால் நிரூபிக்கப்பட்டு, அவரால் வெளிப்படையாய் காண்பிக்கப்பட்டுள்ளது. நாம் இப்பொழுது பயபக்தியோடும், அன்போடும், தூய்மையான இருதயத்தோடும், மனதோடும், ஆத்துமாவோடும் அவரண்டை வர வேண்டும். 22உங்களுக்கு தெரியுமா, அந்த நேரம் விரைவில் வரும். அப்பொழுது அனனியா, சப்பீராள் என்பவர்களிடம் பரிசுத்த ஆவியானவர் பேசினது போல, நமது மத்தியிலும் பேசுவார். பாருங்கள் அந்த நேரம் வந்து கொண்டிருக்கிறது. நாம் அதை நினைவில் கொள்ளுங்கள், பாருங்கள். தேவன் தம்முடைய ஜனங்களின் மத்தியில் வாசம் செய்யப் போகிறார். அதை தான் இப்பொழுது அவர் செய்ய விரும்புகிறார். இந்த செய்தி நன்றாயிருக்கிறது என்று சொல்லி... நான் ஒரு இளைஞனாயிருந்து, எனக்கொரு மனைவியைத் தேடி, அவளை கண்டு பிடித்து, “அவள் உத்தமியாய் இருக்கிறாள், அவள் கிறிஸ்தவள், அவள் நற்பண்பு கொண்டவள், அவள் இவையனைத்தும் ஒன்றாக பெற்றிருக்கிறாள். அவள் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது”, என்று சொல்லுகிறேன். அவள் நல்லவள் என்று நான் எவ்வளவாக கருதினாலும், விவாகப் பொருத்தனையின் அடிப்படையில் அவளை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவள் என்னையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். செய்தியின் விஷயத்திலும் அதையே நாம் காண்கிறோம். அது சரியென்று நாம் அறிகிறோம். அது சரியென்று தேவன் உறுதிப்படுத்துவதை நாம் காண்கிறோம். அது முற்றிலும் சரியே. ஆண்டுக்கு ஆண்டு அது தொடர்ந்து சரியாகவேயிருந்து வருகிறது. அது கூறும் ஓவ்வொன்றும், அவர் கூறினபடியே நிறை வேறுகிறது. அது சரியென்று நாம் அறிகிறோம். ஆனால், பாருங்கள் உங்கள் அறிவுத்திறனைக் கொண்டு அப்படி செய்யாதீர்கள். அப்படி செய்தால் நீங்கள் இரண்டாம் கைக்குவந்த மார்க்கத்தைப் (Second hand religion) பெற்றவர்களாகி விடுவீர்கள். நமக்கு இரண்டாம் கைமார்க்கம் வேண்டாம் - அதாவது வேறொருவர் பெற்றுள்ள அனுபவத்தின் அடிப்படையில், அவர்களுடைய சாட்சியின் அடிப்படையில் நாம் வாழ்வது. 23இயேசு பிலாத்துவிடம் இவ்வாறு சொன்னாரென்று நினைக்கிறேன். சிறிது நேரத்துக்கு முன்பு அந்த வசனத்தை சிந்தித்துக் கொண்டிருந்தேன். அவர் பிலாத்துவிடம், “யார் உம்மிடம் கூறினது? உமக்கு இது வெளிப்பட்டதா? இவைகளை நீர் எவ்வாறு அறிவீர்?” என்று கேட்டார். அந்த வசனம் எனக்கு இப்பொழுது ஞாபகமில்லை. அதை படித்து நீண்ட காலமாகிறது. “உமக்கு எப்படி தெரியும்?” நீர் எப்படி அதை அறிவீர்?“ அவர் தேவனுடைய குமாரனா என்று அவன் கேட்ட போது அவர், ”யார் இதை உமக்கு வெளிப்படுத்தினார்கள்?“ மற்றவர்கள் என்னைக் குறித்து இப்படி உமக்கு சொன்னார்களோ?” என்றார். அதாவது இயேசு அவனிடம், “பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உமக்கு வெளிப்படுத்தினாரா?” என்று மறைமுகமாக கேட்கிறார். பாருங்கள்? பாருங்கள்? “இதை எப்படி அறிந்து கொண்டீர்?மற்றவர்களிடமிருந்து இரண்டாம் கையாகவா, அல்லது அது தேவனிடத்திலிருந்து பெற்ற பரிபூரண வெளிப்பாடா?” இந்த இராப்போஜனத்தை வெறும் நியமமாக அனுசரித்து, “மற்றவர்கள் பங்கு கொள்கிறார்கள், நானும் பங்கு கொள்கிறேன்” என்று நீங்கள் நினைத்து இங்கு வருகிறதாய் அமைந்திருக்கிறதா? அல்லது, “நான் அவரில் ஒரு பாகமாக இருக்கிறேன், உங்களில் ஒரு பாகமாக இருக்கிறேன், நான் உங்களை நேசிக்கிறேன்”, அவரை நேசிக்கிறேன் என்னும் வெளிப்பாடாயிருக்கிறதா? தேவனிடத்தில் நாம் கொண்டுள்ள அன்புக்கும், நாம் ஒருவரோடொருவர் கொண்டுள்ள அன்புக்கும் ஐக்கியத்துக்கும் அடையாளமாக, நாம் ஒருமித்து இராப்போஜனத்தில் பங்கு கொள்கிறோம். 24நான் வேதாகமத்திலிருந்து ஒரு பாகத்தை இப்பொழுது படிக்கப் போகிறேன். பின்பு நான் நினைக்கிறேன்.. ''நீங்கள் எங்கே'', சகோ. பியரி எப்படி இன்று விரும்பினாலும், உங்களிடம் வேதாகமம் இருக்குமானால், நீங்களும் என்னோடு கூட படிக்க விரும்புகிறேன். 1.கொரிந்தியர்:11ம், அதிகாரத்தில், 23ம் வசனம் தொடங்கி படிப்போம். பிறகு, எங்கள் கூடாரத்திலும் கூட நாங்கள் எப்பொழுதும் இராபோஜனத்தையும் கால்கள் கழுவுதலையும் ஒன்றாக அனுசரிப்பது வழக்கம். ஏனெனில் இவையிரண்டும் ஒன்றொடொன்று இணைந்துள்ளன. கால்கள் கழுவுதல் புதன் இரவு இருக்குமென்று சகோதரன் அறிவித்தாறென்று நினைக்கிறேன். ஜன நெருக்கடி காரணமாக, ஜனங்கள் கால்களைக் கழுவ இங்கு போதிய இடம் இல்லாததினால், அவர்கள் புதன் இரவன்று அதை ஆசரிக்கப் போகிறார்கள். 25இப்பொழுது, 1.கொரிந்தியர்:11ம், அதிகாரம் 23ம் வசனம். இப்பொழுது பவுல் கூறுவதைக் கேளுங்கள். இதை இப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். கலாத்தியர்:1.8, “நாங்களாவது வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு சுவிசேஷத்தை (அவன் பிரசங்கித்த இந்த சுவிசேஷத்தையல்லாமல் வேறொன்றை) உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாய் இருக்கக்கடவன்”. பாருங்கள்? நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக் கொண்டேன், என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப்பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது என்னை நினைவுக் கூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். இங்கே நான் நிறுத்திக்கொள்ளுகிறேன், பாருங்கள். இந்த இராப்போஜனத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரத்தைப் புசிக்கும் போது, அது உண்மையான கிறிஸ்துவின் சரீரமென்று அர்த்தமல்ல. அது கத்தோலிக்கரின் உபதேசம். அது சரியென்று எனக்கு தோன்றவில்லை. அது தேவன் நமக்கு கொடுத்திருக்கிற கட்டளையேயன்றி, அது உண்மையான அவருடைய சரீரமல்லவென்பதே என் கருத்து. அது உண்மையில் ஒரு சிறு அப்பத்துண்டு மாத்திரமே. அது ஒரு கட்டளை. 26“அவ்வாறே, இயேசு கிறிஸ்துவில் (இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்) எடுக்கப்படும் தண்ணீர் ஞானஸ்நானம் உங்கள் பாவங்களை மன்னிக்கிறதென்று நான் நம்புவதில்லை. நீங்கள் முழுவதும் ஞானஸ்நானம் பெற்று ஒருக்கால் அப்போஸ்தல சபை, அதாவது ஐக்கிய பெந்தேகொஸ்தே சபையைச் சேர்ந்தவர்கள் இங்கு உட்கார்ந்திருக்க, வகையுண்டு. அவர்கள் இவ்விதமாய் போதிக்கிறார்கள். ஆனால் பாருங்கள், தண்ணீர் பாவங்களை மன்னிக்கிறதென்று நான் நம்புவதில்லை. அப்படியானால் இயேசு மரித்தது வீணாயிருக்குமே. பாருங்கள்? நீங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதைக் காண்பிப்பதற்கென அது தேவனுடைய நியமமாய் விளங்குகிறதென்பது என் கருத்து. ஆனால் மறு ஜென்மத்திற்காக ஞானஸ்நானம் பெறுதலை நான் விசுவாசிப்பதில்லை. தண்ணீர் பாவங்களை மன்னிக்கிறது என்பதை நான் நம்புவதில்லை. அவ்வாறே இந்த அப்பமும் திராட்சரசமும், தேவன் நமக்கு நியமித்திருக்கிற கட்டளையை கைக்கொள்வதே அல்லாமல், மற்றெந்த விதத்திலும் உங்களுடன் சம்பந்தப்படவில்லை. பாருங்கள்? அது உண்மை. தண்ணீர் ஞானஸ்நானமும் அப்படிப்பட்டதே என்று நான் விசுவாசிக்கிறேன். இதை கைக்கொள்ள வேண்டியது நம்மேல் விழுந்த கடமையாகும். அவர் இவையனைத்தையும் நமக்கு முன் மாதிரியாக செய்திருக்கிறார். அவர் நமக்கு முன்மாதிரியாக கால்களைக் கழுவினார். 27இப்பொழுது, “அந்தப்படியே 25ம் வசனம். போஜனம் பண்ணின பின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து : இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது, நீங்கள் இதைப் பானம் பண்ணும் போதெல்லாம் என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணும் போதெல்லாம் (இதை ஞாபகம் கொள்ளுங்கள்) போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள் எவ்வளவு காலத்திற்கு? “அவர் வருமளவும்”. பாருங்கள்? பாருங்கள்?) இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம் பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான். ஒரு நிமிடம் நிறுத்திக்கொள்கிறேன். இவன் இதைக் கூறும் காரணம், இங்குள்ள இன்னொரு வசனத்தை, இன்னொரு அதிகாரத்தை, கவனிப்பீர்களானால் அவன், “நீங்கள் ஓரிடத்தில் கூடி வரும் போது நீங்கள் முந்தி சாப்பிடுகிறீர்கள், ஒருவன் வெறியாயிருக்கிறான். இது கர்த்தருடைய இராப்போஜனம் பண்ணுதலல்லவே.” என்கிறான். அவர்கள் அதை தவறாகப் புரிந்து கொண்டனர். அவர்கள் பெருந்திண்டிக்காரராகி விட்டார்கள். இன்றைக்கு ஜனங்கள் செய்வது போல், எந்தவிதமான வாழ்க்கையும் வாழ்ந்து விட்டு இராப்போஜனத்தை புசித்து பருகுவது போல். பாருங்கள்? அவன், “புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இருக்கின்றனவே. இது நாம் கைக்கொள்ள வேண்டிய தேவனுடைய நியமம்”, என்றான். எந்த மனுஷனும் தன்னைத் தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணக்கடவன். என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம் பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான்.(பாருங்கள்?) 28நீ என்னவாயிருக்கிறாய்? நீ ஒரு கிறிஸ்தவன். பிறருக்கு முன்பாக நீ கிறிஸ்தவனென்னும் பெயரைக் கொண்டு வாழ்கிறாய். நீ இராப்போஜனத்தில் பங்கு கொண்டு, கிறிஸ்தவனாக வாழாமல் போனால், நீகர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியவில்லை, நீ மற்றவரின் வழியில் இடறல் கல்லைப் போடுகின்றாய். ஏனெனில் நீ வாழ வேண்டிய வாழ்க்கை வாழாமல் இராப்போஜனத்தில் பங்குக்கொள்வதை அவர்கள் காண்கின்றனர். நீ கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாமலிருக்கிறாய். இப்பொழுது கவனியுங்கள் அதற்கான சாபம் என்னவென்று. இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும், வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள், அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். (சகோ.பியரி, அதன் சரியான மொழி பெயர்ப்பு “மரித்தும் விட்டார்கள்” என்பதே. பாருங்கள்? “ அநேகர் மரித்தும் விட்டார்கள்”) நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம் (பாருங்கள், நம்மை நாம் ஆராய்ந்து பார்த்துவிட்டால், நாம் நியாயந்தீர்க்கப்பட மாட்டோம்). நாம் நியாயந்தீர்க்கப்படும் போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம். (பாருங்கள், உலகத்தோடு எந்த இனைப்பும் இராதபடிக்கும். ஆகையால், என் சகோதரரே, நீங்கள் போஜனம் பண்ணக் கூடி வரும் போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள் (பாருங்கள்?) நீங்கள் ஆக்கினைக்கேதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியாயிருந்தால் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்ற காரியங்களை நான் வரும்போது திட்டம் பண்ணுவேன். 29வேறுவிதமாக கூறினால், இதை பாரம்பரியமாக கைக்கொள்ள வராதீர்கள். நான் சற்று முன்பு யூதர்களையும் அவர்களுடைய பலியையும் குறித்து சொன்னது போல் அவர்கள், அது மிகவும் அற்புதமானது, அது தேவனால் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதை உத்தமத்தோடும் பயபக்தியோடும் ஒழுங்கோடும் ஆசரிக்காத நிலையையடைந்தது. அதன் விளைவாக அது தேவனுடைய நாசிகளில் துர்க்கந்தமாயிருந்தது. கர்த்தருடைய பந்தியில் பங்குக்கொள்ள நாம் வரும் விஷயத்திலும் அவ்வாறேயுள்ளது. நாம் என்ன செய்கிறோம் என்பதைக் குறித்த உணர்வுடையவர்களாய் வர வேண்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறுவதற்க்கென்று நீங்கள் தண்ணீருக்குள் செல்லும் போது, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அறிந்திருக்கிறது போல், உங்களுக்குள் தேவன் வைத்திருக்கிற கிறிஸ்துவை சபை தரிக்கும் படி செய்கிறீர்கள். நாம் கர்த்தருடைய பந்தியில் பங்குக்கொள்ளும் போது, அது “நான் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் விசுவாசிக்கிறேன். அவர் வானத்திலிருந்திறங்கி ஜீவனைக் கொடுக்கும் தேவன் அருளிய அப்பமென்று விசுவாசிக்கிறேன். அவர் சொல்லியுள்ள ஒவ்வொரு வார்த்தையும் சத்தியமென்று நான் விசுவாசித்து, என் புத்திக்கெட்டின் வரையில் அதன்படி வாழ்ந்து வருகிறேன். அதற்கு தேவனே என்னுடைய நியாயாதிபதி. ஆகவே என்னுடைய சகோதரர்களுக்கு முன்பாகவும் என்னுடைய சகோதரிகளுக்கு முன்பாகவும், நான் கடிந்துக்கொள்ளுகிறதில்லை, நான் சபிக்கிறதில்லை, இவைகளை நான் செய்கிறதில்லை. ஏனென்றால் நான் கர்த்தரிடத்தில் அன்பாயிருக்கிறேன். அவர் அதை அறிந்து எனக்கு சாட்சியாயிருக்கிறார்.'' ஆகவே நான் உலகத்தோடு ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படவில்லை என்பதன் அறிகுறியாக உங்களுக்கு முன்பாக கர்த்தருடைய சரீரத்தில் பங்குக்கொள்கிறேன். என்பதை சபைக்குக் காண்பிக்கிறது. 30இதைக் குறித்து அநேக சாட்சிகளை என்னால் சொல்ல முடியும் என்பதை நினைவில்க்கொள்ளுங்கள். நான் நோயாளிகளின் அறைக்கு இதை எடுத்துச் சென்று அவர்களுக்கு இதை விளக்கிக் காண்பித்த போது, அநேகர் சுகம் பெற்றதை நான் கண்டிருக்கிறேன். இஸ்ரவேல் ஜனங்கள் நாற்பது ஆண்டுகள் வனாந்திரத்தில் பிரயாணம் செய்த போது, அவர்களுடைய வஸ்திரங்கள் கிழிந்து போகவில்லை , அவர்களில் ஒருவர் கூட பலவீனமாயிருக்கவில்லை - அந்த இருபது லட்சம் பேர்களில். அது இதற்கு முன்னடையாளமாக அமைந்துள்ளது, முன்னடையாளமே அவ்வாறிருந்தால், உண்மையானது என்ன செய்யும்? பலி செலுத்தப்பட்ட மிருகம் அவர்களுக்கு அதை செய்ததானால், இம்மானுவேலாகிய இயேசு கிறிஸ்துவின் சரீரம் நமக்கு இன்னும் விசேஷத்தவைகளை செய்யுமல்லவா? நாம் பந்தியில் பங்குக்கொள்ள வரும் போது நமக்குத் தெரிந்த அளவுக்கு பயபக்தியோடு வருவோம்.